search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர் சிவச்சந்திரன்"

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான அரியலூர் ராணுவ வீரர் குடும்பத்திற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறினார்கள். #SivaChandran
    ஜெயங்கொண்டம்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் பலியானார். அவரது குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிவச்சந்திரனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிவச்சந்திரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்.

    பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது. அதனை நாம் போற்ற வேண்டும். இதற்கு காரணமான பாகிஸ்தான் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை மத்திய அரசு எடுத்து வருகிறது. உரிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். பிரதமர் மீதும், ராணுவத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கை பொய்க்காது.

    இன்று தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகள் குறித்து பேச உள்ளேன். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்றார்.

    இதேப்போல் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர், சிவசந்திரன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோ‌ஷமாக இருக்கிறோம் என்றால், அதற்கு இவர்களை (ராணுவ வீரர்கள்) போன்ற எல்லைச்சாமிகள் தான் காரணம். இன்றைக்கு நமது தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும். சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து சிவசந்திரனின் மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறுகையில், இந்திய ராணுவத்தின் பலத்தை பாகிஸ்தான் அரசுக்கு காண்பிக்க வேண்டும். இனியும் இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். #PulwamaAttack #SivaChandran
    ×